Enter your Email Address to subscribe to our newsletters

ஹைதராபாத் , 03 ஜூன் (ஹி.ச.)
ஆந்திரப் பிரதேச துணை முதல்வரும் ஜனசேனா கட்சித் தலைவருமான பவன் கல்யாண், தெலங்கானா மக்களிடம் மன்னிப்பு கேட்ட பிறகே மாநிலத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று தெலங்கானா போக்குவரத்து மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பொன்னம் பிரபாகர் வலியுறுத்தியுள்ளார்.
தெலங்கானா மாநில உருவாக்க தினத்தை முன்னிட்டு ஹைதராபாத்தில் நவ நிர்மாண சங்கல்ப சபா என்ற பொதுக்கூட்டத்தை நடத்த பவன் கல்யாண் திட்டமிட்டிருந்தார். ஆனால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளை கருத்தில் கொண்டு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதையடுத்து அவர் தனது இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார்.
இந்த விவகாரம் குறித்து ஹுச்னாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பொன்னம் பிரபாகர், தெலங்கானா மாநில உருவாக்கத்திற்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த பவன் கல்யாண், இப்போது மாநில உருவாக்க தினத்தன்றே பொதுக்கூட்டம் நடத்த முயல்வது ஏற்றுக்கொள்ள முடியாதது.
இது தெலங்கானா மக்களின் உணர்வுகளை புண்படுத்தும் செயல் என்று கூறினார்.
மேலும், பவன் கல்யாணை கடுமையாக விமர்சித்த அவர், தெலங்கானாவில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொள்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் மாநில மக்களின் சுயமரியாதையை பாதிக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றார்.
நான்கு மாதங்களுக்கு முன்பு பவன் கல்யாண் தெலங்கானா வந்தபோது அரசின் சார்பில் அனைத்து மரியாதைகளும் வழங்கப்பட்டதாக குறிப்பிட்ட அமைச்சர், மறைந்த மக்கள் பாடகர் கத்தர் குறித்து முன்பு கூறிய கருத்துகளுக்காகவும் அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தெலங்கானா எப்போதும் ஆந்திர மக்களை வரவேற்கும் என்றும், ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் சுதந்திரமாகச் சென்று வர உரிமை இருப்பதாகவும் அமைச்சர் பொன்னம் பிரபாகர் தெரிவித்தார்.
Hindusthan Samachar / M.DEEPAK RAJA