Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 03 ஜூன் (ஹி.ச.)
மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக கடந்த சில காலமாகவே சர்ச்சைகள் நீடித்து வருகின்றன.
இதுதொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், திருப்பரங்குன்றம் மலையை முழுமையாக மத்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும், மலையைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் மற்றும் மலையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி, கே.கே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த மாதம் விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் ஸ்ரீமதி ஆகியோர் அடங்கிய அமர்வு, திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை நவீன கருவிகள் கொண்டு ஆய்வு செய்ய வேண்டும் என்றும், அந்த ஆய்வு அறிக்கையை மே மாத இறுதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, கடந்த மே 21-ஆம் தேதி திருப்பரங்குன்றம் மலையை அளவிடும் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின. மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் தலைமையில், திருமங்கலம் கோட்டாட்சியர் சிவஜோதி, வருவாய்த் துறையினர் மற்றும் நில அளவைப் பிரிவு அதிகாரிகள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு, கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு உள்ளிட்ட மலையைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளிலும் துல்லியமாக அளவிடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதற்காக DGPS எனப்படும் அதிநவீன செயற்கைக்கோள் வழிகாட்டி அளவீட்டுக் கருவிகள் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 7 நாட்களாகத் தொடர்ந்து தொய்வின்றி நடைபெற்று வந்த இந்த நவீன அளவீட்டு மற்றும் ஆய்வுப் பணிகள் இன்றுடன் முழுமையாக நிறைவடைந்துள்ளன.
இந்த ஆய்வின் மூலம் சேகரிக்கப்பட்ட விவரங்கள் மற்றும் அளவீட்டு வரைபடங்கள் அடங்கிய விரிவான அறிக்கை விரைவில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN