Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பதி, 03 ஜூன் (ஹி.ச.)
தெலுங்கானா மாநிலத்தில் நில இழப்பீடு தொடர்பாக ஆட்சியர் அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான அரசு ஊழியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மஹபுபாத் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் துறை அட்டெண்டராக பணியாற்றி வந்த முரளி என்பவர், நில இழப்பீடு பெறுவதற்காக அலுவலகத்திற்கு தொடர்ந்து வந்து கொண்டிருந்த யாக்கம்மா என்ற பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
கிரீன்ஃபீல்ட் நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டத்திற்காக தனது நிலத்தை இழந்த யாக்கம்மா, அதற்கான இழப்பீடு தொகையை பெற பலமுறை ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று வந்ததாக தெரிகிறது. அப்போது, சம்பந்தப்பட்ட அலுவலர் முரளி அவரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த யாக்கம்மாவும் அவரது உறவினர்களும் அலுவலக வளாகத்திலேயே முரளியை செருப்பால் தாக்கிய சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த காட்சி சமூக வலைதளங்களிலும் வேகமாக பரவி பேசுபொருளாக மாறியுள்ளது.
இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண் மாவட்ட ஆட்சியர் ஸ்னேகா சபரிஷ் மற்றும் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முரளியை கைது செய்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும், பெண் அளித்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து அனைத்து கோணங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகத்தில் பொதுமக்களிடம் அத்துமீறி நடந்துகொண்டதாக எழுந்துள்ள இந்த குற்றச்சாட்டு, தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P