Enter your Email Address to subscribe to our newsletters

ராமநாதபுரம், 03 ஜூன் (ஹி.ச.)
ராமநாதபுரத்திலிருந்து சிதம்பரம் நோக்கி
TN 68 N 1321 பதிவு எண் கொண்ட அரசுப் பேருந்து, தொண்டிப் பகுதியைக் கடக்கும்போது கட்டுப்பாடின்றி அங்கும் இங்குமாகச் சென்றுள்ளது.
இதனால் அச்சமடைந்த பயணிகள், உடனடியாகத் தொண்டிப் பகுதியில் உள்ள பொதுமக்களுக்குத் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து, உஷாரான அப்பகுதி இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் சிலர், அந்தப் பேருந்தை இருசக்கர வாகனங்களில் துரத்திச் சென்றனர்.
கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள
பி.வி. பட்டினம் கிராமப் பகுதியில் பேருந்தை மடக்கி நிறுத்தினர்.
பொதுமக்கள் பேருந்தை நிறுத்தி ஓட்டுனரைக்கீழே இறக்கிச் சோதனை செய்தபோது, அவர் கடுமையான மது போதையில் இருந்தது தெரியவந்தது.
அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் காட்டுமன்னார்குடி பகுதியைச் சேர்ந்த மனோ என்பதும், இன்று ஒருநாள் மட்டும் மாற்றுப் பணியாக (On Deputation) தற்காலிகமாக இந்தப் பேருந்தை ஓட்ட வந்ததும் தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து, பேருந்திலிருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாகக் கீழே இறக்கப்பட்டனர்.
பின்னர் அவர்களுக்கு மாற்றுப் பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டு, அனைவரும் பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
பொதுமக்களும் பயணிகளும் சாமர்த்தியமாக செயல்பட்டதால் நூற்றுக்கணக்கான உயிர்கள் காப்பாற்றப்பட்டு, பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் குறித்துப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் காவல்துறையினரும் உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்ட ஓட்டுநர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam