பரந்தூர் மக்களின் கோரிக்கை என்ன? வளர்ச்சி பெயரில் வாழ்வுரிமையை பறிக்கக் கூடாது - த.வா.க வேல்முருகன்
சென்னை, 03 ஜூன் (ஹி.ச.) பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகாலப் போராட்டம் குறித்து பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவர்களின் உண்மையான கோரிக்கையை அரசு மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தமிழக
Velmurugan


Hh


சென்னை, 03 ஜூன் (ஹி.ச.)

பரந்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராம மக்களின் நீண்டகாலப் போராட்டம் குறித்து பல்வேறு தவறான கருத்துகள் பரப்பப்பட்டு வருவதாகவும், அவர்களின் உண்மையான கோரிக்கையை அரசு மற்றும் பொதுமக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் எக்ஸ் தளத்தில் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பரந்தூர் மக்கள் விமான நிலையத்திற்கு மாற்றாக சிப்காட் தொழிற்பேட்டை கோரவில்லை என்றும், விமான நிலையமும் வேண்டாம், சிப்காட்டும் வேண்டாம் என்பதே அவர்களின் தெளிவான மற்றும் உறுதியான நிலைப்பாடு என்றும் தெரிவித்துள்ளார்.

எங்கள் விளைநிலங்களைப் பறிக்காதீர்கள், எங்கள் நீர்நிலைகளை அழிக்காதீர்கள், எங்கள் தலைமுறைகளின் வாழ்வாதாரத்தை சிதைக்காதீர்கள் என்பதே மக்களின் ஒரே கோரிக்கை.

விவசாயியின் நிலம் என்பது வெறும் சொத்து அல்ல. அது அவரது உயிர், அடையாளம், வரலாறு மற்றும் எதிர்காலம். அந்த மண்ணில் முன்னோர்களின் உழைப்பும், அடுத்த தலைமுறையின் நம்பிக்கையும் புதைந்திருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய நிலங்களை தொழிற்சாலைகள் அல்லது விமான நிலையங்களுக்காக மாற்றுவது வளர்ச்சி அல்ல என்றும், அது மக்களை அவர்களின் வேர்களில் இருந்து பிடுங்கி எறியும் அநீதியாகும் என்றும் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே விமான நிலையத் திட்டத்தால் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக பரந்தூர் பகுதி மக்கள் அச்சத்துடனும், நிச்சயமற்ற நிலையிலும் வாழ்ந்து வருவதாகக் கூறிய அவர், தற்போது சிப்காட் அமைக்கும் திட்டம் தொடர்பான தகவல்கள் மேலும் அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஒரு திட்டத்திற்கு பதிலாக மற்றொரு திட்டத்தைக் கொண்டு வந்து மக்களின் வாழ்வுரிமையை பறிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை. பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் வாழும் மக்களின் கோரிக்கை ஒன்றே ஒன்று. அவர்கள் வாழும் கிராமங்களும், விவசாய நிலங்களும் அப்படியே பாதுகாக்கப்பட வேண்டும்.

மக்கள் விரும்பாத எந்தத் திட்டமும் அவர்கள்மீது திணிக்கப்படக் கூடாது” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேநேரத்தில், அந்தப் பகுதிகளில் தரமான பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்கல்வி நிலையங்கள், அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய அரசு மருத்துவமனைகள் அமைக்க வேண்டும் என்றும், ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை புனரமைத்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், விவசாயத்தை பாதுகாக்கும் பாசன வசதிகளை மேம்படுத்தி, இயற்கையோடு இணைந்து தற்சார்பு பொருளாதாரத்துடன் மக்கள் தங்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழும் சூழலை உருவாக்கித் தர வேண்டும் என்பதே மக்களின் உண்மையான எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.

வளர்ச்சி என்ற பெயரில் மக்களை இடம்பெயர வைப்பது எளிது. ஆனால் மக்கள் வாழும் இடத்திலேயே கல்வி, மருத்துவம், குடிநீர், பாசனம், வேலைவாய்ப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதே உண்மையான வளர்ச்சி.

அதுவே சமூகநீதியின் அடையாளம் என வேல்முருகன் கூறியுள்ளார்.

பரந்தூர் மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் இந்தப் போராட்டத்திற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி தொடர்ந்து துணை நிற்கும் என்றும், மக்களின் வாழ்வுரிமை, விவசாய உரிமை, நில உரிமை மற்றும் இயற்கை வளங்களை பாதுகாக்கும் இந்த அறப்போராட்டத்தில் இறுதி வரை களத்தில் நிற்போம் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ