Enter your Email Address to subscribe to our newsletters

காஞ்சிபுரம், 03 ஜூன் (ஹி.ச)
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் வைகாசி மாத பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த திருக்கோயிலில் நடைபெறும் வைகாசி பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் பக்தர்களை பெருமளவில் ஈர்க்கும் முக்கிய திருவிழாவாகும்.
பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று காலை வெகு சிறப்பாக நடந்தேறியது.
விழாவின் முக்கிய அங்கமாக 73 அடி உயரம் கொண்ட ஐந்து நிலைகளுடன் கூடிய பிரம்மாண்ட தேரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இன்று அதிகாலையிலேயே பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க, வேத கோஷங்கள் ஒலிக்க தேவியருடன் பெருமாள் தேரில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற்றது.
பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா எனும் பக்தி கோஷங்களுடன் தேரின் வடத்தை பிடித்து இழுத்தனர். நான்கு மாட வீதிகளிலும் தேர் வலம் வந்தபோது, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பெருமாளை தரிசித்து வழிபட்டனர்.
திருக்கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அடிப்படை ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அசம்பாவிதங்களை தவிர்க்க பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
தேரோட்ட நிகழ்வு முடிந்த பின்னர் இரவில் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்.
Hindusthan Samachar / vidya.b