Enter your Email Address to subscribe to our newsletters

பெங்களூரு, 03 ஜூன் (ஹி.ச.)
கர்நாடக மாநிலத்தின் புதிய முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் இன்று பதவியேற்க உள்ளார். காங்கிரஸ் தலைமையிலான அரசு அமைந்து இரண்டரை ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், முதலமைச்சராக இருந்த சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, கர்நாடக துணை முதலமைச்சராக செயல்பட்டு வந்த டி.கே. சிவகுமார், காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு புதிய முதலமைச்சராக பொறுப்பேற்கிறார்.
பெங்களூருவில் உள்ள லோக் பவன் வளாகத்தில் இன்று மாலை 4.05 மணியளவில் நடைபெறும் விழாவில், கர்நாடக ஆளுநர் தவார்சந்த் கெலாட் அவருக்கு பதவிப் பிரமாணமும் ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார்.
டி.கே. சிவகுமாருடன் 12 முதல் 14 அமைச்சர்கள் வரை பதவியேற்பார்கள் என அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், அமைச்சரவை பட்டியல் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இந்த பதவியேற்பு விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P