Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
தமிழ்நாட்டில் செயல்படும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநரகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவக் கல்லூரிகள் மாணவர்களிடம் இருந்து அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
குறிப்பாக, படிப்புக் காலத்தைத் தாண்டி கட்டணம் வசூலிப்பது, விடுதி, உணவு, போக்குவரத்து என பல்வேறு பெயர்களில் கூடுதல் தொகை கேட்பது குறித்து பெற்றோர்களும் மாணவர்களும் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்துள்ள மருத்துவக் கல்வி இயக்குநரகம், தேசிய மருத்துவ ஆணையத்தின் உத்தரவுப்படி, எம்பிபிஎஸ் படிப்புக்கான நான்கரை ஆண்டு காலத்திற்கு மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
இன்டர்ன்ஷிப் காலம் உட்பட எந்தக் காரணத்தைக் கூறியும் அதற்கு மேல் கூடுதல் காலத்திற்கு கட்டணம் வசூலிக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டண வசூல் குறித்து முழுமையாக ஆய்வு செய்வதற்காக தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழு, கல்லூரிகளில் நேரடி ஆய்வு நடத்தி, அரசு நிர்ணயித்த கட்டண விவரங்களை மீறி வசூல் நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்கும்.
விதிமீறல் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கல்லூரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒவ்வொரு மருத்துவக் கல்லூரியும் விடுதிக் கட்டணம், போக்குவரத்துக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவற்றை வெளிப்படையாக அறிவிப்புப் பலகையில் வெளியிட வேண்டும் எனவும் இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
மறைமுகக் கட்டணங்கள் வசூலிப்பதை தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களிடம் இருந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிகள் மீது புகார் அளிக்கலாம் எனவும், அவற்றின் மீது உடனடி விசாரணை நடத்தப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b