ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் பேரிகேடை இழுத்துச் சென்ற ஆட்டோ இளைஞர்கள் - போலீசார் தீவிர விசாரணை
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) சென்னை துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில், அவசர சிகிச்சைக்காக சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துக்கொண்டு ஆபத்தான முறையில் சென்ற இளைஞர்களி
ஆட்டோ


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

சென்னை துரைப்பாக்கம் – பல்லாவரம் 200 அடி ரேடியல் சாலையில், அவசர சிகிச்சைக்காக சென்ற ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல், போக்குவரத்து போலீசார் வைத்திருந்த பிளாஸ்டிக் பேரிகேடை ஆட்டோவில் இழுத்துக்கொண்டு ஆபத்தான முறையில் சென்ற இளைஞர்களின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் வீடியோவில், ஆட்டோவில் பயணித்த இளைஞர்கள் சாலையின் நடுவே இருந்த பிளாஸ்டிக் பேரிகேடை நீண்ட தூரம் இழுத்துச் சென்றதுடன், பின்னால் அவசர ஒலியுடன் வந்த ஆம்புலன்ஸுக்கும் வழிவிடாமல் தொடர்ந்து பயணித்தது பதிவாகியுள்ளது.

இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

அவசர சிகிச்சைக்காக செல்லும் ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் செயல்பட்டது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மிகக் கடுமையான போக்குவரத்து விதிமீறலாக கருதப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக, ஆட்டோவில் சென்ற இளைஞர்கள் யார், அவர்கள் பயன்படுத்திய வாகனத்தின் பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை சேகரித்து, பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதும், அவர்கள் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam