பணியில் உள்ள ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 35% ஆக குறைக்க வேண்டும் - அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச) பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலி
Anbumani


சென்னை, 30 ஜூன் (ஹி.ச)

பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக ஜூலை 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 2028 ஆகஸ்டுக்குள் ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து நடைபெறும் சிறப்புத் தகுதித்தேர்வில் ஆசிரியர்கள் எளிதில் தேர்ச்சி பெறும் வகையில் மதிப்பெண் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை பா.ம.க. ஏற்கனவே முன்வைத்ததாக தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் படித்த காலத்திலிருந்த பாடத்திட்டத்திற்கும் தற்போதைய பாடத்திட்டத்திற்கும் பெரிய வேறுபாடு இருப்பதால், தற்போது நடத்தப்படும் தகுதித்தேர்வில் வெற்றி பெறுவது அவர்களுக்கு சவாலாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதுள்ள விதிகளின்படி பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 சதவீதமும், பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கு 40 சதவீதமும் தேர்ச்சி மதிப்பெண்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ள அன்புமணி, இம்மதிப்பெண்களும் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு அதிகமாகவே இருப்பதாக ஆசிரியர் அமைப்புகள் தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்கத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான தேர்ச்சி மதிப்பெண் 37 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டிய அவர், 20 ஆண்டுகளுக்கும் மேலான பணி அனுபவம் கொண்ட ஆசிரியர்களின் திறமையை யாரும் சந்தேகிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் சிறப்பு ஆசிரியர் தகுதித்தேர்வில் பொதுப்பிரிவினருக்கான தேர்ச்சி மதிப்பெண்ணை 150-க்கு 75 (50%) ஆகவும், மற்ற அனைத்து பிரிவினருக்கும்

150-க்கு 52 (35%) ஆகவும் குறைத்து தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதன்மூலம் தேர்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் பணியில் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ