ஆந்திர கல்வி சீர்திருத்தங்களுக்கு மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் பாராட்டு
போகாபுரம் , 30 ஜூன் (ஹி.ச.) ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ ஏ.பி. மாடல் பள்ளியை இன்று செவ்வாய்க்கிழமை நாரா லோகேஷுடன் இணைந்து தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார். அப்போது பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும
A


போகாபுரம் , 30 ஜூன் (ஹி.ச.)

ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயநகரம் மாவட்டம் போகாபுரத்தில் உள்ள பி.எம். ஸ்ரீ ஏ.பி. மாடல் பள்ளியை இன்று செவ்வாய்க்கிழமை நாரா லோகேஷுடன் இணைந்து தர்மேந்திர பிரதான் பார்வையிட்டார்.

அப்போது பள்ளியில் செயல்படுத்தப்பட்டு வரும் நவீன கற்பித்தல் முறைகள், டிஜிட்டல் வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு அம்சங்களை விரிவாக ஆய்வு செய்தார்.

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக பயன்படுத்தப்படும் ‘ஜாதுயி பிதாரா’ கற்றல் பெட்டகம், மாணவர்களின் முன்னேற்றத்தை பதிவு செய்யும் மதிப்பீட்டு ஆவணங்கள், மதிப்புக் கல்வி தொடர்பான நூல்கள் மற்றும் அரசின் ‘சர்வேபள்ளி ராதாகிருஷ்ணா மாணவர் மித்ரா கிட்’ திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பாடப்புத்தகங்கள், குறிப்பேடுகள், சீருடை, காலணி, பள்ளிப்பை உள்ளிட்ட பொருட்களையும் அவர் பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து பேசி அமர் தெரிவித்ததாவது,

ஆந்திரப் பிரதேசத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் கல்வி சீர்திருத்தங்கள் மற்றும் தொழில்நுட்ப அடிப்படையிலான கற்பித்தல் முறைகளுக்கு மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் பாராட்டு தெரிவித்துள்ளார். மாநில கல்வித்துறை மந்திரி நாரா லோகேஷ் மேற்கொண்டு வரும் முயற்சிகள் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதற்கு முக்கிய பங்காற்றுவதாகவும் அவர் கூறினார்.

மாநில கல்வித்துறையின் செயல்பாடுகளை கண்காணிக்கும் ‘லீப்’ (LEAP) டாஷ்போர்டு குறித்து நாரா லோகேஷ் விளக்கமளித்தார்.

மாணவர் சேர்க்கை, வருகைப்பதிவு, கற்றல் முன்னேற்றம், மதிய உணவுத் திட்டம், பள்ளி விலகல் விவரங்கள் மற்றும் அதிகாரிகளின் ஆய்வு உள்ளிட்ட தகவல்களை நிகழ்நேரத்தில் கண்காணிக்கும் வசதி இதில் இருப்பதாக தெரிவித்தார்.

மாநிலம் முழுவதும் அமைக்கப்படவுள்ள ஸ்மார்ட் கிச்சன் திட்டம் தொடர்பான காணொளியையும் அமைச்சர்கள் பார்வையிட்டனர். கடப்பா மாவட்டத்தில் முன்னோடி திட்டமாக செயல்படுத்தப்பட்டு வரும் ஸ்மார்ட் கிச்சன் குறித்து நாரா லோகேஷ் விளக்கினார்.

தொடர்ந்து விளையாட்டு அறை மற்றும் திறன் மேம்பாட்டு ஆய்வகத்தை பார்வையிட்ட அமைச்சர்கள், மாணவர்கள் பைத்தான் நிரலாக்க மொழியில் உருவாக்கிய செயலியை பாராட்டினர்.

பின்னர் 9-ம் வகுப்பு மாணவர்களுடன் வகுப்பறையில் அமர்ந்து கலந்துரையாடிய தர்மேந்திர பிரதான், பாடங்கள் குறித்தும், மாணவர்களின் கற்றல் முறைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பினார். மாணவர்கள் ஆர்வமுடன் பதிலளித்தனர்.

மாணவர்கள் எளிதில் பாடங்களைப் புரிந்துகொள்ளும் வகையில் இருமொழிப் பாடப்புத்தகங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும், திறன் அடிப்படையிலான கற்றலுக்காக ‘பி.ஏ.எல்.’ (PAL) ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் நாரா லோகேஷ் தெரிவித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில், 3-டி அச்சுத் தொழில்நுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட நினைவுப் பரிசுகளை மாணவர்கள் இரு அமைச்சர்களுக்கும் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சியில் மாநில அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட கலெக்டர், கல்வித்துறை உயரதிகாரிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Hindusthan Samachar / M.DEEPAK RAJA