ஆய்வாளர் விமலா பணியிடை நீக்கத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு
சென்னை, 30 ஜூன் (ஹி.ச) லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. ஒரு புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக
Vimala


சென்னை, 30 ஜூன் (ஹி.ச)

லஞ்ச ஒழிப்புத்துறையில் பணியாற்றி வந்த காவல் ஆய்வாளர் விமலாவை பணியிடை நீக்கம் செய்த உத்தரவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்த இடைக்கால தடையை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

ஒரு புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) பதிவு செய்த விவகாரத்தில், ஆய்வாளர் விமலா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடந்த ஜூன் 17ஆம் தேதி அவரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த பணியிடை நீக்க உத்தரவை எதிர்த்து ஆய்வாளர் விமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, விமலாவுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட பணியிடை நீக்க உத்தரவு முதற்கட்ட பார்வையில் உள்நோக்கம் கொண்டதாக இருப்பதாகக் குறிப்பிட்டு, அந்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து கடந்த வாரம் உத்தரவிட்டார்.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இடைக்கால தடையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும், இந்த மேல்முறையீட்டு வழக்கை அவசரமாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர், தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வில் முறையிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மேல்முறையீட்டு மனுவுக்கு பதிவுத்துறையில் வழக்கு எண் வழங்கப்பட்ட பிறகு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு தெரிவித்தது.

இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர வாய்ப்புள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ