அரசு ஊழியர்களின் ஊக்க ஊதிய உயர்வு ரத்து,மீண்டும் வழங்கக் கோர உரிமை இல்லை – சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச) பணியில் இருக்கும் போது கூடுதல் கல்வித்தகுதி பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக ஒரே தவணை ஊக்கத்தொகை வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை
High court


சென்னை, 30 ஜூன் (ஹி.ச)

பணியில் இருக்கும் போது கூடுதல் கல்வித்தகுதி பெறும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஊக்க ஊதிய உயர்வு திட்டத்தை ரத்து செய்து, அதற்கு பதிலாக ஒரே தவணை ஊக்கத்தொகை வழங்கும் அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், ஊக்க ஊதிய உயர்வை ரத்து செய்த அரசாணையை செல்லாது என அறிவித்து, பழைய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்குகள் நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் ஆர். கலைமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசு எடுத்துள்ள கொள்கை முடிவை நீதிமன்றம் எளிதில் தலையிட்டு சட்டவிரோதமானது என அறிவிக்க முடியாது என்று தெரிவித்தனர்.

மேலும், அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை அல்லது ஊக்கத்திட்டத்தை அரசு தனது கொள்கை முடிவின் அடிப்படையில் மாற்றவோ, ரத்து செய்யவோ அதிகாரம் பெற்றுள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

ஊக்க ஊதிய உயர்வு திட்டம் ரத்து செய்யப்பட்ட பிறகு, அதனை மீண்டும் வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்கள் உரிமையாகக் கோர முடியாது எனவும் நீதிபதிகள் தெளிவுபடுத்தினர்.

இதையடுத்து, அரசின் முடிவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் முடித்து வைத்து உத்தரவிட்டது.

இந்த தீர்ப்பு அரசு ஊழியர்களுக்கான ஊக்கத் தொகை மற்றும் ஊதிய சலுகைகள் தொடர்பான அரசின் கொள்கை முடிவுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ