கான்கிரீட் மிக்சர் வண்டியில் இருந்து கொட்டிய டீசல் - வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்
கோவை, 30 ஜூன் (ஹி.ச.) கோவை மாவட்டம் ராமநாதபுரம் ஆல் இந்தியா ரேடியோ (All India Radio) அருகே இன்று காலை கான்கிரீட் கலவை இயந்திரத்தை (Concrete Mixer) ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து லிட்டர் கணக்கில் டீசல் சாலையில் கொட்டியதால், அந்த வழியாக வந்த இருசக்
Diesel


கோவை, 30 ஜூன் (ஹி.ச.)

கோவை மாவட்டம் ராமநாதபுரம் ஆல் இந்தியா ரேடியோ

(All India Radio) அருகே இன்று காலை கான்கிரீட் கலவை இயந்திரத்தை (Concrete Mixer) ஏற்றி வந்த வாகனத்தில் இருந்து லிட்டர் கணக்கில் டீசல் சாலையில் கொட்டியதால், அந்த வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டிகள் வழுக்கி விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று காலை ராமநாதபுரம் திருச்சி பிரதான சாலையில், ஆல் இந்தியா ரேடியோ அலுவலகம் அருகே கான்கிரீட் கலவை இயந்திரம் பொருத்தப்பட்ட பிரம்மாண்ட வாகனம் ஒன்று சென்று கொண்டு இருந்தது.

அப்போது, அந்த வாகனத்தின் எரிபொருள் தொட்டியில் ஏற்பட்ட எதிர்பாராத தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, எரிபொருள் கசிந்து சாலையில் லிட்டர் கணக்கில் கொட்டத் தொடங்கி உள்ளது. ரோடு முழுவதும் டீசல் பரவி எண்ணெய் பசையாக மாறியதை அறியாத பின்னால் வந்த இருசக்கர வாகன ஓட்டிகள், வண்டியை ‘பிரேக்’ அடித்த போது ‘ஸ்பாட்’டிலேயே நிலைதடுமாறி வழுக்கி விழுந்தனர்.

இதில் அடுத்தடுத்து வந்த பல இருசக்கர வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாகச் சரிந்து விழுந்ததில், பயணித்த வாகன ஓட்டிகளுக்குக் கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனால் அந்தப் பகுதியில் திடீரெனப் போக்குவரத்து முற்றிலுமாக ஸ்தம்பித்தது.

விபத்து நேரிட்டதை உணர்ந்த கான்கிரீட் கலவை நிறுவனத்தின் ஊழியர்கள், உடனடியாக வாகனத்தை ஓரமாக நிறுத்தினர். மேலும், நிலைமையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டு, போக்குவரத்து போலீஸார் வருவதற்கு முன்பாகவே தாங்களாகவே களத்தில் இறங்கி, சாலையில் மேலும் வாகனங்கள் வழுக்கி விழாமல் தடுக்கவும், ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தவும் தீவிரமாக ஈடுபட்டனர்.

சாலையில் டீசல் கொட்டிய பகுதியில் மண்ணைக் கொட்டி சரி செய்யும் பணிகளும் உடனே மேற்கொள்ளப்பட்டன.

அதிர்ஷ்டவசமாகப் பின்னால் பெரிய வாகனங்கள் ஏதும் வராததால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.

Hindusthan Samachar / ANANDHAN