கோவையின் வடவள்ளியில் வாகன ஓட்டிகளை அச்சுறுத்தும் குதிரைகள்
கோவை, 30 ஜூன் (ஹி.ச.) கோவை மாநகரின் முக்கியப் புறநகர்ப் பகுதியான வடவள்ளியில், சாலைகளில் கூட்டமாகச் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையையும், வே
Horse


கோவை, 30 ஜூன் (ஹி.ச.)

கோவை மாநகரின் முக்கியப் புறநகர்ப் பகுதியான வடவள்ளியில், சாலைகளில் கூட்டமாகச் சுற்றித் திரியும் குதிரைகளால் வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி, அப்பகுதி மக்கள் இடையே பெரும் கவலையையும், வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.

கோவையின், மருதமலை ரோடு, வடவள்ளி பேருந்து நிலையச் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் முக்கியக் குடியிருப்புச் சாலைகளில் கடந்த சில நாட்களாக ஏராளமான குதிரைகள் எஜமானர்கள் யாரும் இன்றி நடுரோட்டில் ஹாயாக உலா வருகின்றன.

பகல் நேரங்களில் மட்டுமன்றி, நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளிலும் இந்த நிலவரம் நீடிப்பதால், வடவள்ளி வழியாக அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் கார்கள், எதிர்பாராத விதமாகக் குறுக்கே பாயும் குதிரைகளால் நிலைதடுமாறி விழுந்து விபத்துகளில் சிக்கி வருகின்றனர்.

குதிரைகளின் இந்த ஆபத்தான வடவள்ளி பகுதியைச் சேர்ந்த வாகன ஓட்டி ஒருவர், தனது செல்போனில் வீடியோ’வாகப் பதிவு செய்து,

“உயிர்ப் பயத்தோடு வண்டி ஓட்ட வேண்டி உள்ளது” என ஆதங்கத்துடன் சமூக வலைதளங்களில் தட்டிவிட்டு உள்ளார்.

இந்த வீடியோக்கள் தற்போது கோவையின் பல்வேறு வாட்ஸ்அப் குரூப்கள் மற்றும் சமூக வலைதள பக்கங்களில் காட்டுத் தீயாய் பரவி, நெட்டிசன்கள் மத்தியில் நாய்கள், காட்டுப் பன்றிகள் வரிசையில் தற்போது குதிரைகள் என மாநகராட்சிக்கு எதிரான கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிழைப்பிற்காகக் குதிரைகளை வளர்க்கும் உரிமையாளர்கள், தங்களது சுயலாபத்திற்காக அவற்றைச் சாலைகளில் அவிழ்த்து விடுவதே இதற்கு முக்கியக் காரணம் என உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, கோவை மாநகராட்சி நிர்வாகமும், வடவள்ளி பகுதி அதிகாரிகளும் உடனடியாகக் களத்தில் இறங்கி, சாலைகளில் ஆபத்தை விளைவிக்கும் இந்தக் குதிரைகளை அதிரடியாகப் பிடித்துச் செல்ல வேண்டும் என்றும், அவற்றின் உரிமையாளர்களைக் கண்டறிந்து அபராதம் விதிக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN