Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஜூன் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே இயங்கி வரும் தமிழ்நாடு செய்தித்தாள் காகித நிறுவனத்தின் அலகு-2 தொழிற்சாலையில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள், சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை முதல் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊழியர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இரண்டாவது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தொழிலாளர்களுக்கு அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும், பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும், வருங்கால வைப்பு நிதி மற்றும் இஎஸ்ஐ உள்ளிட்ட சட்டப்பூர்வ சலுகைகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
தொழிற்சாலை நுழைவு வாயில் முன்பாக திரண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள், தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
கடந்த பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையிலேயே பணிபுரிந்து வரும் தங்களுக்கு, நிரந்தரத் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியமோ சலுகைகளோ கிடைப்பதில்லை என்றும், விலைவாசி உயர்வுக்கு ஏற்ப ஊதிய உயர்வும் வழங்கப்படவில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர்.
இரண்டு நாட்களாக நீடித்து வரும் இந்தப் போராட்டத்தால் தொழிற்சாலையின் உற்பத்திப் பணிகள் பகுதியளவு பாதிக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர் நலத்துறை அதிகாரிகளும், நிர்வாகத் தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுகத் தீர்வு காண வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
Hindusthan Samachar / vidya.b