Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூன் (ஹி.ச.)
திண்டுக்கல் தொழிலாளர் நலத்துறை இணை ஆணையர் சுப்பிரமணியன் அரசு ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு தடை விதிக்கக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில் அரசு ஊழியர்களுக்கு எதிராக வரும் புகார்களை விசாரிக்க லஞ்ச ஒழிப்புத் துறைக்கு எந்தத் தடையும் இல்லை என உயர் நீதிமன்ற மதுரை கிளை திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
மனுதாரர் மீது அளிக்கப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையை அறிவதற்காக, அந்தப் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பி வைத்தது சரியான நடைமுறையே என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
அதேவேளையில், அரசு ஊழியர்களை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளில் இருந்து பாதுகாக்கும் நோக்கில், பெயர், முகவரி இல்லாத புகார்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனவும் நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
இதுபோன்ற மொட்டைப் புகார்கள் அதிகாரிகளைத் தேவையின்றி மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
மேலும், இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்கள் கட்டாயமானவை அல்ல என்றும், அவை வெறும் பரிந்துரை மட்டுமே என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம் அளித்துள்ளது.
எனவே, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணை அதிகாரத்தை அரசாணை கட்டுப்படுத்தாது என்பது உறுதியாகியுள்ளது.
ஒழுங்கு நடவடிக்கையைத் தடுத்து நிறுத்தும் நோக்கிலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனை ஏற்க முடியாது என்றும் கூறி, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்தத் தீர்ப்பு, லஞ்ச ஒழிப்புத் துறையின் விசாரணைக்கு உள்ள சட்டரீதியான அதிகாரத்தை மீண்டும் உறுதி செய்துள்ளதுடன், ஆதாரமற்ற புகார்களால் அரசு ஊழியர்கள் பாதிக்கப்படாமல் இருக்கவும் வழிவகை செய்துள்ளது.
Hindusthan Samachar / vidya.b