Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூன் (ஹி.ச.)
2020 ஆம் ஆண்டு 9 சவரன் தங்க நகை திருட்டு தொடர்பாக புகார் அளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, காவல்துறையின் செயல்பாடுகள் குறித்து கடும் அதிருப்தி தெரிவித்தது.
முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதோடு காவல்துறை தனது கடமையை முடித்துக்கொள்ள முடியாது என கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முறையான விசாரணை நடத்தாமல் பல ஆண்டுகளாக வழக்குகளை துப்பு துலக்காமல் கைவிடுவது குடிமக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் சுட்டிக்காட்டினர்.
இதுபோன்ற தேங்கி கிடக்கும் வழக்குகளுக்கு தீர்வு காண, அனுபவமும் திறமையும் வாய்ந்த அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழுவை உருவாக்க வேண்டும் என நீதிமன்றம் வலியுறுத்தியது.
மேலும், அந்த குழுவில் இடம்பெறும் அதிகாரிகளுக்கு வழக்குகளை விரைந்து முடிக்க தேவையான கூடுதல் அதிகாரங்களையும், ஊக்கத்தொகையுடன் கூடிய சிறப்பு ஊதியத்தையும் அரசு வழங்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
குற்றவாளிகளை கண்டுபிடித்து நீதியின் முன் நிறுத்தும் அதிகாரிகளுக்கு சிறப்பு வெகுமதிகள் மற்றும் பாராட்டுகளை அரசு அளிக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இதன் மூலம் விசாரணை அதிகாரிகளின் செயல்திறன் அதிகரிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நீதி கிடைக்கவும் வழிவகுக்கும் என நீதிமன்றம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வழக்குகளில் விரைந்து நடவடிக்கை எடுக்க அரசு முன்வர வேண்டும் என்பதே நீதிமன்றத்தின் அழுத்தமான வேண்டுகோளாக உள்ளது.
Hindusthan Samachar / vidya.b