Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
சென்னை தலைமைச் செயலகத்தில் எரிசக்தித் துறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்களை சந்தித்துப் பேசியபோது,
திமுக மற்றும் அதிமுக இணைந்து ஆட்சி அமைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், அதற்கு பாஜக திரைமறைவில் ஆதரவு அளித்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
மேலும் அவர் கூறுகையில்,
திமுக – அதிமுக இணைந்து ஆட்சி அமைக்க முயற்சி செய்ததாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஏற்கனவே பேசியுள்ளதாகவும், இன்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளதாகவும் கூறினார்.
மேலும், கூட்டணியில் இருந்து சிலர் வெளியேறியதற்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததற்கும் முக்கிய காரணம் திமுக – அதிமுக கூட்டணி அமைக்கும் முயற்சிதான் என அவர் தெரிவித்தார்.
தீய சக்தி என்று விமர்சிக்கப்பட்ட திமுகவுடன் இணைந்து செயல்பட முயற்சி மேற்கொள்ளப்பட்டதால் பலர் அதிருப்தி அடைந்ததாகவும் கூறினார்.
தற்போதும் திமுக தலைவர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் சில தொழிலதிபர்கள் இணைந்து குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க முயற்சி செய்து வருவதாக அமைச்சர் நிர்மல்குமார் குற்றம்சாட்டினார்.
ஆளுநரை சந்தித்தது தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அது அலுவல் மற்றும் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றும், முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்குகள் பதிவு செய்ய அனுமதி கோரி அனுப்பப்பட்ட கோப்புகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டியுள்ளது என்றும் தெரிவித்தார்.
மேலும், திமுக மற்றும் அதிமுக தலைமைத்துவங்கள் தங்களது சொத்துக்களை பாதுகாப்பதற்காகவே இணைந்து செயல்பட முயற்சி செய்கின்றன என்றும், மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மக்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என்ற எண்ணத்தால்தான் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து வருகிறார்கள் என்றும் கூறினார்.
இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் பாஜகவுக்கு ஆதரவு அளித்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்றும், அரசியல் பதவிகளுக்காக அவர்கள் சமரசம் செய்து கொள்வார்கள் என்றும் அவர் விமர்சித்தார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார்,
வைகோ எந்தப் பதவிக்கும் ஆசைப்பட்டவர் அல்ல. மக்கள் தீர்ப்புக்கு எதிராக திமுக செயல்படுவதால்தான் பலர் அந்தக் கட்சியிலிருந்து விலகி வருகின்றனர் என்று தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ