நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு கட்டுப்பாடு -புதிய சட்ட மசோதா கொண்டுவர மத்திய அரசு ஆலோசனை
புதுடெல்லி, 30 ஜூன் (ஹி.ச.) நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நுழைவுத் தேர்வுகளுக்கான கடுமையான போட்டி மற்றும் பயிற்சி அ
மத்திய அரசு


புதுடெல்லி, 30 ஜூன் (ஹி.ச.)

நீட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை கொண்டுவர மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நுழைவுத் தேர்வுகளுக்கான கடுமையான போட்டி மற்றும் பயிற்சி அழுத்தம் காரணமாக மாணவர்கள் தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் சுமார் 20 மாணவர்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, பயிற்சி மையங்களின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஆண்டு மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் பல முக்கிய பரிந்துரைகள் இடம்பெற்றுள்ளன.

அதன்படி, பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு தினமும் 2 முதல் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக பயிற்சி அளிக்கக் கூடாது என்றும், 12-ஆம் வகுப்பு முடித்த மாணவர்களை மட்டுமே முழுநேர மாணவர்களாக பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகளிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சி வழங்குவதற்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பரிந்துரைகளும் இடம்பெற்றுள்ளன.

இந்த பரிந்துரைகளின் அடிப்படையில், நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களை ஒழுங்குபடுத்தும் வகையில் புதிய சட்ட மசோதாவை மத்திய அரசு கொண்டு வர உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Hindusthan Samachar / VINOTH KUMAR P