Enter your Email Address to subscribe to our newsletters

லோனாவாலா, 30 ஜூன் (ஹி.ச.)
புனே அருகே உள்ள லோகாட் கோட்டையில் இருந்து தவறி விழுந்து ஜூன் 18-ம் தேதி கேத்தன் அகர்வால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. முக்கிய குற்றவாளியான சியா கோயல், கேத்தன் அகர்வாலின் வருங்கால மனைவி ஆவார். தற்போது திருமணம் செய்ய விருப்பமில்லாத அவர், பாதிக்கப்பட்டவரை மணக்க குடும்பத்தினரின் நெருக்கடிக்கு ஆளானதாக காவல்துறை சந்தேகிக்கிறது.
சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரி இருவரும் ஜூன் 23-ம் தேதி கைது செய்யப்பட்டு, 7 நாள் காவலில் உள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மகாராஷ்டிர அரசு விரைவு நீதிமன்றம் அமைக்க ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த நிலையில் கேத்தன் அகர்வால் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சேத்தன் சௌத்ரியின் நடை பகுப்பாய்வு (Gait Analysis) சோதனையை லோனாவாலா ஊரக காவல்துறையினர் நடத்த உள்ளனர்.
சம்பவம் நடந்த நாளில் லோகாட் கோட்டை வாயிலுக்கு அருகில் சௌத்ரி இருந்ததை உறுதிப்படுத்தும் நோக்கில், தடயவியல் நடை ஒப்பீட்டு முறைகள் பயன்படுத்தப்பட உள்ளன.
நடை பகுப்பாய்வு என்பது நடக்கும்போது அல்லது ஓடும்போது ஏற்படும் மனித அசைவுகளை ஆய்வு செய்வதாகும். சிசிடிவி அல்லது வீடியோக்களில் பதிவான சந்தேக நபர்களை அடையாளம் காண காவல்துறையால் இந்த முறை பயன்படுத்தப்படுகிறது.
நடை பகுப்பாய்வுடன், சேத்தன் சௌத்ரியை லோகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தை மறுஉருவாக்கம் செய்யும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுவரை குற்றம்சாட்டப்பட்ட சியா கோயல் மட்டுமே மறுஉருவாக்க நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்ட நிலையில், சௌத்ரிக்கு இது முதல் முறையாகும்.
மேலும், சம்பவத்தன்று சௌத்ரி அணிந்திருந்த உடைகளை மீட்கவும் புலனாய்வு அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர்.
முன்னதாக, புனே காவல்துறையினர் சியா கோயலை லோகாட் கோட்டைக்கு அழைத்துச் சென்று குற்றச் சம்பவத்தை மறுஉருவாக்கம் செய்தனர்.
அப்போது பாதிக்கப்பட்டவரின் எடைக்கு சமமான பொம்மையைப் பயன்படுத்தி சம்பவம் மீண்டும் நடத்திக் காட்டப்பட்டது.
இந்த வழக்கு தொடர்பாக சியா கோயல் மற்றும் சேத்தன் சௌத்ரியை ஜூலை 3-ம் தேதி வரை காவலில் வைக்க வட்காவ் மாவல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சியா கோயல் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விபுல் துஷிங் கூறுகையில், அரசுத் தரப்பு 7 நாட்கள் காவல் கோரியது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின், நீதிமன்றம் ஜூலை 3 வரை காவலை அனுமதித்தது என்றார்.
சௌத்ரி தொடர்பான ஆதாரங்களைச் சேகரிப்பதில் புலனாய்வு அதிகாரிகள் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
புனேவில் இருந்து லோகாட் கோட்டைக்கு பயணிக்க பயன்படுத்தியதாகக் கூறப்படும் அவரது இருசக்கர வாகனத்தை கடந்த ஜூன் 28 ஆம் தேதி லோனாவாலா ஊரக காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
மேலும், சம்பவத்தன்று சௌத்ரி அணிந்திருந்த ஹூடி மற்றும் ஹெட்போன்களும் மீட்கப்பட்டுள்ளன.
Hindusthan Samachar / vidya.b