மதுரையில் இளைஞர் இறுதிச்சடங்கில் 100-க்கும் மேற்பட்ட பைக்குகளில் அட்டகாசம் – போக்குவரத்து நெரிசல்
மதுரை, 30 ஜூன் (ஹி.ச.) மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த ''ரெக்க கார்த்தி'' என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது. இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துச் செல்லப்பட்டது
போக்குவரத்து நெரிசல்


மதுரை, 30 ஜூன் (ஹி.ச.)

மதுரை மாவட்டம் அலங்காநல்லூரைச் சேர்ந்த 'ரெக்க கார்த்தி' என்ற இளைஞர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இதற்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் உடல் எடுத்துச் செல்லப்பட்டது.

அப்போது, அரசு ராஜாஜி மருத்துவமனை முதல் வைகையாற்று வடகரை சாலை வரை, 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் வந்த அவரது நண்பர்கள் பைக் ரேஸ், வீலிங் உள்ளிட்ட ஆபத்தான சாகசங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிலர் ஒரே பைக்கில் மூன்று பேர் பயணித்ததுடன், பைக்குகளில் கொடிகள் கட்டி சாலையின் நடுவே வேகமாக சென்றனர்.

இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பள்ளி முடிந்து வீடு திரும்பிய மாணவிகள், பள்ளி வாகனங்களில் பயணித்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

சம்பவ இடத்தில் காவல்துறையினர் இருந்தபோதிலும், விதிமீறி சாகசங்களில் ஈடுபட்டவர்களை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.

இறுதிச்சடங்கு ஊர்வலங்களின் போது போக்குவரத்து விதிகளை மீறி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என காவல்துறை எச்சரித்திருந்த நிலையில், இந்த சம்பவத்தில் அந்த எச்சரிக்கை நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்றும் மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், மறைந்தவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வை கண்ணியமாக நடத்தாமல், ஆபத்தான பைக் சாகசங்கள் மூலம் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியது கண்டிக்கத்தக்கது எனவும், இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam