புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுகவில் பெரும் குழப்பம் - 1170 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
புதுக்கோட்டை, 30 ஜூன் (ஹி.ச) அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அம்மாவட்டத்தின் அதிமுகவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த பி.கே.
புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுகவில் பெரும் குழப்பம் - 1170 நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா


புதுக்கோட்டை, 30 ஜூன் (ஹி.ச)

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுக்கோட்டை தெற்கு மாவட்ட அதிமுகவில் பெரும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

அம்மாவட்டத்தின் அதிமுகவின் மாநில பொறுப்பாளர்களாக இருந்த பி.கே. வைரமுத்து உட்பட மூன்று பேரும், ஒன்பது மாவட்ட பொறுப்பாளர்களும் ராஜினாமா செய்துள்ளனர்.

இது தவிர, கிளை, ஒன்றிய, நகர, பேரூர் அளவிலான நிர்வாகிகள் என மொத்தம் 1170 பேர் கட்சிப் பொறுப்புகளில் இருந்து விலகியுள்ளனர்.

இந்த மொத்த விலகலுக்கு முக்கிய காரணமாக, சமீபத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட தெற்கு மாவட்ட செயலாளர் ராமு மீதான அதிருப்தியே சுட்டிக்காட்டப்படுகிறது.

மாவட்ட நிர்வாகிகளின் கருத்துகளை கேட்காமல் தன்னிச்சையாக எடுக்கப்பட்ட இந்த நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே அனைவரும் ஒட்டுமொத்தமாக பதவி விலகியுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து பேசிய மாநில பொறுப்பாளர் பி.கே. வைரமுத்து,

கட்சித் தலைமையின் தற்போதைய போக்கு தொண்டர்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது.

அடிமட்ட நிர்வாகிகளின் கருத்துகளுக்கு மதிப்பளிக்காமல் எடுக்கப்படும் முடிவுகளால் கட்சி பலவீனமடைகிறது.

எடப்பாடி பழனிசாமியை தலைமைப் பொறுப்பில் இருந்து மாற்றினால் மட்டுமே நாங்கள் மீண்டும் அதிமுகவில் தொடர்வோம். இல்லையெனில் எங்களது முடிவில் மாற்றம் இருக்காது

என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

ஒரே நேரத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் விலகியிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் அதிமுகவின் கட்டமைப்பை கடுமையாக பாதித்துள்ளது.

வரும் உள்ளாட்சித் தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய சூழலில், இந்த மொத்த ராஜினாமா கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அதிமுக தலைமை என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b