Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
சென்னை மணலி பகுதியில் கடந்த ஒரு வாரமாக இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மின்வெட்டு ஏற்பட்டு வருவதால் ஆத்திரமடைந்த 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மணலி பகுதியில் தினமும் இரவு 9 மணியளவில் மின்தடை ஏற்பட்டு, சில நேரங்களில் நள்ளிரவு 12 மணிக்குப் பிறகே மின்சாரம் திரும்ப வருவதாகவும், சில பகுதிகளில் ஒரு நாள் முழுவதும் மின்சாரம் இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருவதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து புகார் அளிக்க பொதுமக்கள் புதிய எம்.ஜி.ஆர். நகர் மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்ததுடன், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் யாரும் இல்லாததால் மக்கள் அதிருப்தியடைந்தனர்.
இதையடுத்து, 300-க்கும் மேற்பட்டோர் மணலி–காமராஜர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டு, மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த மறியலால் மணலி, மாதவரம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மின்வாரிய அதிகாரிகளுடன் பேசி மின்தடையை விரைவில் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறுகையில்,
ஒரு வாரமாக தினமும் இரவு மின்வெட்டு ஏற்படுகிறது. மின்சாரம் வந்தாலும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக மின்விசிறி, ஏ.சி. உள்ளிட்ட மின்சாதனங்களை பயன்படுத்த முடியவில்லை. குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புகார் அளிக்க மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றாலும் அதிகாரிகள் யாரும் இருப்பதில்லை.
எனவே, மணலியில் நிலவும் தொடர் மின்வெட்டுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam