Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச)
சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜயின் 52-வது பிறந்தநாளை முன்னிட்டு முன்னாள் மாணவர்கள் சார்பில் 52 மரக்கன்றுகள் நடுதல், ரத்ததான முகாம் மற்றும் மனித உடல் உறுப்புதானம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
இதில் உயர்கல்வித்துறை அமைச்சர் பி. விஸ்வநாதன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பி. விஸ்வநாதன்,
முதலமைச்சரின் பிறந்தநாளை முன்னிட்டு சமூக நலப் பணிகள் மேற்கொள்ளப்படுவது பாராட்டத்தக்கது.
ஏழை, எளிய மக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நோக்கில் பல்வேறு நலத்திட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் தெரிவித்தார்.
மேலும், நடிகர் விவேக்கின் கனவுத் திட்டமான ஒரு கோடி மரக்கன்றுகள் நடும் இலக்கை நிறைவேற்ற அவரது மனைவி அருட்செல்வி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகக் கூறிய அமைச்சர், அந்த முயற்சிக்கு அரசு சார்பில் முழு ஒத்துழைப்பும் வழங்கப்படும் என்றார்.
ஆளுநரை சந்தித்தது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் ஆளுநரை மரியாதை நிமித்தமாக சந்திப்பது மரபு என தெரிவித்தார்.
சட்டப்பேரவை தலைவர் ஜே.சி.டி. பிரபாகர், அமைச்சர் நிர்மல் குமார் மற்றும் தாம் இணைந்து ஆளுநரை சந்தித்ததாகவும், ஆளுநரின் பேருரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் இந்த சந்திப்பு நடைபெற்றதாகவும் கூறினார்.
மேலும், தமிழக வெற்றிக் கழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருவதாக ஆளுநர் தெரிவித்ததாகவும், வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் சிறப்பாக நடைபெறும் என்றும், அரசுக்கு தனது முழுமையான ஆதரவை ஆளுநர் தெரிவித்ததாகவும் அமைச்சர் பி. விஸ்வநாதன் கூறினார்.
அதேவேளையில், மாநிலக் கல்லூரிக்குள் தமிழக வெற்றிக் கழக ஆதரவாளர்கள் கட்சிக் கொடி மற்றும் கட்சி துண்டுகளுடன் நுழைந்தது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்காமல் அங்கிருந்து சென்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ