Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 30 ஜூன் (ஹி.ச)
விருதுநகரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி, அதன் காட்சிகளை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட விவகாரத்தில், தமிழ்நாடு வெற்றிக் கழகத்தின் (தவெக) விருதுநகர் மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார்.
அண்மையில், விருதுநகரில் நடைபெற்ற தேசிய போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் முத்துவேல் நுழைந்து, அங்கு பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர்களிடம் கேள்விகள் எழுப்பி விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
அந்த காட்சிகள் பின்னர் பாடல் இணைத்து எடிட் செய்யப்பட்ட ரீல்ஸ் வடிவில் சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டன.
இந்த வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதுடன், பல்வேறு தரப்பினரிடமும் விமர்சனங்களை கிளப்பியது.
இந்த நிலையில், கட்சியின் ஒழுங்கு விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளுக்கு முரணான செயல்பாடுகளில் ஈடுபட்டதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, தவெக விருதுநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.பி. செல்வம் வெளியிட்டுள்ள உத்தரவில், முத்துவேல் மத்திய ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து மூன்று மாத காலத்திற்கு தற்காலிகமாக நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடுகளை மீறும் செயல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ