Enter your Email Address to subscribe to our newsletters

திருவள்ளூர் 30 ஜூன் (ஹி.ச.)
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே ஆலாடு கிராமத்தில் அமைந்துள்ள சுமார் 100 ஆண்டுகள் பழமையான அருள்மிகு ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோயிலில் நடைபெற்ற 3-வது மஹா ருத்ரா பூஜை எனப்படும் ருத்ரயாகம் செவ்வாய்க்கிழமை சிறப்பாக நிறைவு பெற்றது.
சித்ரா பவுர்ணமி அன்று தொடங்கிய இந்த யாக பூஜை, மூன்றாவது பவுர்ணமியான ஆனி பவுர்ணமியன்று நிறைவு பெற்றது.
இதையொட்டி ஆலாடு ஊராட்சி வெள்ளக்குளம் பொழுது விடிந்தான் மேடு கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நீலாயுதாக்க்ஷி சமேத ஸ்வேதபுரி சர்வேதஸ்வரர் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து சீர்வரிசை பொருட்கள் சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வாகன ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு யாகக் குண்டத்திற்கு கொண்டு வரப்பட்டன.
பின்னர் யாகக் குண்டம் வளர்க்கப்பட்டு, வேத மந்திரங்கள் முழங்க யாக கலசங்களுக்கும் வேதபுரீஸ்வரருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டன.
யாகசாலையில் பல்வேறு ஹோமங்கள் மற்றும் வேள்விகள் நடைபெற்ற நிலையில், ஸ்ரீலஸ்ரீ சாக்த மஹாகுரு, வாழும் சித்தர் டாக்டர் ஸ்ரீம் மகேஷ்குமார் சுவாமிகள் முன்னிலையில் பூர்ணாஹூதி நடைபெற்றது.
நிகழ்ச்சியின் போது பக்தர்கள் யாகக் குண்டத்தில் பொறி மற்றும் அவல் போட்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பொன்னேரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam