Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூன் (ஹி.ச.)
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு மற்றும் விருதுகள் வழங்கும் விழா, கல்லூரியின் நூற்றாண்டு நினைவு அரங்கில் சிறப்பாக நடைபெற்றது.
பி.எஸ்.ஜி. அண்ட் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பயன்பாட்டு கணிதம் மற்றும் கணக்கீட்டு அறிவியல் துறையின் தலைவர் முனைவர் ஷைனா ஷீன் வரவேற்புரையாற்றினார்.
விழாவில், பல்வேறு பொறியியல் துறைகளைச் சேர்ந்த 397 பட்டதாரிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதில், முதல் தரவரிசை பெற்ற 9 மாணவர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்பட்டன.
மேலும், கல்வி, ஆராய்ச்சி மற்றும் சமூகப் பணிகளில் சிறந்து விளங்கிய பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்களுக்கு பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பல்துறை திறமையை வெளிப்படுத்திய மாணவர்களுக்கு பன்முகத்தாள்வார் விருதும் வழங்கப்பட்டது.
முக்கிய விருந்தினராக மைக்ரோசாப்ட் ஆராய்ச்சி இந்தியா (MSR India) நிர்வாக இயக்குநர் டாக்டர் வெங்கட் பத்மநாபன் கலந்துகொண்டு பட்டங்கள் மற்றும் விருதுகளை வழங்கினார்.
பின்னர் அவர் பேசியபோது,
தொழில்நுட்ப மாற்றங்கள் மனித வாழ்வின் அடுத்த கட்ட வளர்ச்சியின் வெளிப்பாடாகும் என்றும், தற்போது வேகமாக வளர்ந்து வரும் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பமும் அந்த வளர்ச்சியின் ஒரு பகுதிதான் என்றும் கூறினார்.
தொழில்நுட்ப மாற்றங்களை இளம் தலைமுறை மாணவர்கள் ஆழமாகப் புரிந்துகொண்டு, புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களை உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் பல்வேறு துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam