வைகோ அரசியல் அனாதையாகிவிட்டார், விரக்தியில் பேசுகிறார் – ஆர்.எஸ். பாரதி விமர்சனம்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச.) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு ப
Rsb


சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது,

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முன்வைத்த குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர்,

கூட்டணியை விட்டு வெளியேறியவர்களைப் பற்றி பேச விரும்பவில்லை என்றும், வைகோவின் கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் தெரிவித்தார்.

வைகோவுடன் கட்சி தொடங்கிய காலத்தில் இருந்த பல முக்கிய நிர்வாகிகள் தற்போது அவருடன் இல்லை என்றும், அவருடைய கட்சியில் இருந்தவர்கள்கூட தற்போது திமுகவில் இணைந்து வருவதாகவும் கூறினார்.

இதனால் அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைகோ விரக்தியுடன் கருத்து தெரிவித்து வருகிறார் என்று விமர்சித்தார்.

மேலும், திமுக சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற மதிமுகவைச் சேர்ந்த இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் கூறியதாக வைகோவே தெரிவித்திருந்ததாகவும், அதன்மூலம் குதிரைப் பேர அரசியலுக்கு விஜய் தூண்டுதல் அளித்ததாக அவர் ஒப்புக்கொண்டதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டினார்.

மதிமுக குறித்து பேசுகையில்,

அரசியல் ரீதியாக பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய கட்சி அல்ல. கூட்டணியை விட்டு சென்றவர்களைப் பற்றி தொடர்ந்து பேசுவதன் மூலம் நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.

இனி வைகோ குறித்து கேள்வி கேட்க வேண்டாம் என்று செய்தியாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.

வைகோ தனது உண்மையான அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்திவிட்டார் என்றும், அரசில் நடைபெறும் பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே சில அரசியல் நிகழ்வுகள் உருவாக்கப்படுகின்றன என்றும் அவர் கூறினார்.

அதிமுக உறுப்பினர்கள் ராஜினாமா செய்தால் இடைத்தேர்தல் வந்தாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருப்பதாகவும், மாநிலம் முழுவதும் மக்கள் மீண்டும் திமுக பக்கம் திரும்பி வருவதாகவும் ஆர்.எஸ். பாரதி தெரிவித்தார்.

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்னும் சில மாதங்களில் தேர்தல் வரலாம் என்று குறிப்பிட்டதற்கு அரசியல் முக்கியத்துவம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர்,

புதிய பொறுப்பேற்ற தலைவர்கள் ஆரம்பத்தில் பல கருத்துகளை கூறுவார்கள். பின்னர் அரசியல் சூழலை புரிந்துகொள்வார்கள் என்று தெரிவித்தார்.

மேலும், “ஜனநாயகன்” திரைப்பட தயாரிப்பாளர் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக நியமிக்கப்பட்டது தொடர்பான விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர்,

தற்போதைய அரசின் பல்வேறு நடவடிக்கைகளே கேள்விக்குறியாக உள்ளன என்றார்.

தொடர்ந்து பேசிய ஆர்.எஸ். பாரதி,

திமுக நடத்திய போராட்டங்களின் விளைவாகவே தற்போதைய அரசில் சில அமைச்சர்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விவாதங்கள் எழுந்துள்ளதாகவும், திமுக நடத்தும் போராட்டங்களுக்கு அரசியல் நோக்கமும் அர்த்தமும் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

Hindusthan Samachar / P YUVARAJ