Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 30 ஜூன் (ஹி.ச.)
தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு எதிராக திமுக பொருளாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை அவர் திடீரென வாபஸ் பெற்றுள்ளார்.
இதையடுத்து, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு, 'DMK Files' என்ற பெயரில் திமுக முக்கிய நிர்வாகிகளின் சொத்து விவரங்கள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் அடங்கிய பட்டியலை அப்போது தமிழக பாஜக மாநிலத் தலைவராக இருந்த அண்ணாமலை வெளியிட்டார்.
அதில், டி.ஆர். பாலு தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.
இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் ஆதாரமற்றவை என்றும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் உள்ளன என்றும் கூறி, டி.ஆர். பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு கடந்த சில மாதங்களாக விசாரணையில் இருந்து வந்த நிலையில், டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி சாட்சியமும் அளித்திருந்தார்.
அப்போது அண்ணாமலை தரப்பில் தீவிர குறுக்கு விசாரணை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோதே, டி.ஆர். பாலு
தாம் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கை வாபஸ் பெறுவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட சைதாப்பேட்டை நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
நீதிமன்றத்தில் முக்கிய கட்டத்தை எட்டியிருந்த இந்த வழக்கு திடீரென வாபஸ் பெறப்பட்டிருப்பது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டி.ஆர். பாலு தரப்பில் வழக்கை வாபஸ் பெற்றதற்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
Hindusthan Samachar / VINOTH KUMAR P