Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 30 ஜூன் (ஹி.ச.)
தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று பதிவு செய்து, வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளை முடித்து வைத்தது.
கன்னியாகுமரியைச் சேர்ந்த நாகராஜன் தாக்கல் செய்த மனுவில்,
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்களில் பிரசாதங்கள் இனி அந்தந்த கோவில் நிர்வாகங்களால் தயாரித்து விற்பனை செய்யப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.
அந்த அரசாணை திட்டமிட்டபடி அமல்படுத்தப்படுவதையும், தற்போது இருப்பதைப் போலவே பிரசாதங்கள் தட்டுப்பாடின்றி பக்தர்களுக்கு தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்யவும் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, அறநிலையத்துறை தரப்பில், அரசாணை முறையாக செயல்படுத்தப்படும் என்றும், ஜூலை 1 முதல் கோவில் நிர்வாகங்களே பிரசாதங்களை தயாரித்து விற்பனை செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், பிரசாதங்கள் தற்போதுள்ள நிலைபோல தட்டுப்பாடின்றி தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனக் குறிப்பிட்டு, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P