பௌர்ணமி கிரிவலம் முடிந்து சொந்த ஊர்களுக்கு திரும்பிய பக்தர்கள் – திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் அலைமோதிய கூட்டம்
திருவண்ணாமலை 30 ஜூன் (ஹி.ச.) ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசல மலையை கிரிவலம் முடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் கூட்
திருவண்ணாமலை


திருவண்ணாமலை 30 ஜூன் (ஹி.ச.)

ஆனி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை அருணாசல மலையை கிரிவலம் முடித்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்காக திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் குவிந்தனர். இதனால் ரயில் நிலையத்தில் பெரும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

விழுப்புரத்திலிருந்து திருவண்ணாமலை, வேலூர், காட்பாடி வழியாக திருப்பதி செல்லும் திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்ய பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.

ரயில் வந்தவுடன் பாதுகாப்பாக ஏறிச் செல்லும் வகையில் ரயில்வே நிர்வாகமும், ரயில்வே போலீசாரும் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.ரயிலில் இருந்து அனைத்து பயணிகளும் இறங்கிய பின்னரே ஏறுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் தடுப்புக் கயிறுகள் அமைக்கப்பட்டு, வரிசையாக பக்தர்கள் ரயிலில் ஏற்றப்பட்டனர்.

மேலும், ரயில் நிலையத்தில் ஒலிபெருக்கி மூலம் பயணிகள் தங்களது செல்போன் மற்றும் உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை கைகளைப் பிடித்தபடி அழைத்துச் செல்லவும், ரயில் வரும்போது மஞ்சள் கோட்டிற்குள் நின்று பாதுகாப்பை கடைப்பிடிக்கவும் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

உலகப் புகழ்பெற்ற பஞ்சபூதத் தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலையில், ஒவ்வொரு பௌர்ணமி நாளிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் 14 கிலோமீட்டர் கிரிவலம் மேற்கொள்வது வழக்கம். இந்த ஆனி மாத பௌர்ணமியையொட்டி தமிழகம் மட்டுமின்றி ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்திருந்தனர்.

கடந்த 48 மணி நேரமாக இடைவிடாமல் பக்தர்கள் கிரிவலம் மேற்கொண்ட நிலையில், பௌர்ணமி நிறைவடைந்ததும் அவர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பியதால் திருவண்ணாமலை ரயில் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரித்தது.

ரயில்வே போலீசாரின் ஒழுங்குமுறை நடவடிக்கையால் கூட்ட நெரிசல் கட்டுப்படுத்தப்பட்டு, பக்தர்கள் பாதுகாப்பாக ரயில்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam