ஊர்காவல்படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் பணி நிலைப்பு வழங்க வேண்டும் - தமிழக அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்
சென்னை, 30 ஜூன் (ஹி.ச) ஊர்காவல்படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்கி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் எக
Velmurugan


Hh


சென்னை, 30 ஜூன் (ஹி.ச)

ஊர்காவல்படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்கி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை தமிழக அரசு முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

ஊர்காவல்படையினர் கடந்த 10 ஆண்டுகளாக ஊதிய உயர்வு மற்றும் பணி நிலைப்பு கோரி தொடர்ந்து போராடி வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

காவல்துறையினருக்கு துணையாக செயல்படும் ஊர்காவல் படை 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாகவும், இதில் தற்போது 15,622 பேர் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

2011-ஆம் ஆண்டு வரை ஒரு நாள் ஊதியமாக ரூ.67 மட்டுமே வழங்கப்பட்ட நிலையில், பின்னர் அது ரூ.152 ஆக உயர்த்தப்பட்டதாகவும், பெரும்பாலான ஊர்காவல்படையினர் இதையே முழுநேர தொழிலாக நம்பி வாழ்ந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஊதிய உயர்வு தொடர்பான வழக்கில், நாள் ஒன்றுக்கு ரூ.560 வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தமிழக அரசு 2017-ஆம் ஆண்டு அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் பணி நாட்களின் எண்ணிக்கையை ஐந்து நாட்களாகக் குறைத்ததால் மாத வருமானத்தில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பின்னர் 2019-ஆம் ஆண்டு பணி நாட்கள் 10 ஆக உயர்த்தப்பட்டபோதும், பணிநேரம் மற்றும் தினசரி ஊதியம் குறைக்கப்பட்டதால், மாத ஊதியம் ரூ.2,800 என்ற நிலையே தொடர்ந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஊர்காவல்படையினர் மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாடிய நிலையில், அவர்களுக்கு மாதம் முழுவதும் பணி வழங்கி ரூ.16,800 மாத ஊதியம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும், அந்த உத்தரவு ஆந்திரப் பிரதேசம், ஒடிசா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தாலும், தமிழகத்தில் இன்னும் அமல்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு பணிகளில் காவல்துறையினருக்கு இணையாக ஊர்காவல்படையினரும் செயல்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ள அவர், காவல்துறையில் அதிகரித்து வரும் காலியிடங்கள் மற்றும் பணிச்சுமையை கருத்தில் கொள்ளும்போது, ஊர்காவல்படையினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது என்றும் கூறியுள்ளார்.

எனவே, உச்சநீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக நிறைவேற்றும் வகையில் ஊர்காவல்படையினருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய பணி நிலைப்பு வழங்க தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ