100 நாள் வேலை திட்டத்தை முடக்கிவிட்டு மாநிலங்கள் மீது புதிய திட்டத்தை திணிக்கிறீர்களா? - பிரதமருக்கு கார்கே 7 கேள்விகள்
புதுடெல்லி, 30 ஜூன் (ஹி.ச.) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான (MGNREGA) மன்ரேகா திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எக்ஸ் தளத்தில் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் வெளியி
கார்கே


புதுடெல்லி, 30 ஜூன் (ஹி.ச.)

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான (MGNREGA) மன்ரேகா திட்டம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எக்ஸ் தளத்தில் 7 கேள்விகளை எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்ட பதிவில்,

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தை நடைமுறையில் முடக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையாக 2026 மார்ச் நிலவரப்படி ரூ.17,144.13 கோடி வழங்கப்படாமல் இருப்பதாகவும், அதில் தொழிலாளர்களின் ஊதிய நிலுவை மட்டும் ரூ.7,846.25 கோடி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 1 முதல் புதிய VB-G RAM G திட்டத்தை மாநிலங்கள் மீது திணிக்க முயற்சிக்கப்படுவதாகவும், ஆனால் கர்நாடகா, ஜார்கண்ட், தெலங்கானா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு மன்ரேகா நிலுவை நிதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் ஆட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் ஊதியச் செலவை முழுமையாக மத்திய அரசே ஏற்ற நிலையில், புதிய திட்டத்தில் மொத்தச் செலவில் 40 சதவீதத்தை மாநிலங்களே ஏற்க வேண்டும் என மாற்றப்பட்டுள்ளதாகவும், இதற்கு பாஜக ஆளும் மாநிலங்களே எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் கார்கே கூறியுள்ளார்.

மேலும், ஆண்டுக்கு 60 நாட்கள் வேலை நிறுத்தம் செய்யும் 'Blackout' விதிக்கு பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதை ஏன் மத்திய அரசு திணிக்கிறது என்றும், 125 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்கும் இலக்கை நிறைவேற்றுவதால் மாநிலங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தினக்கூலியை ரூ.400 ஆக உயர்த்த வேண்டும் என்ற காங்கிரஸின் கோரிக்கையை ஏற்காதது ஏன் என்றும், பீகார், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் ஊதிய உயர்வு கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கார்கே விமர்சித்துள்ளார்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P