Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 30 ஜூன் (ஹி.ச.)
அரசு பள்ளி மாணவர்களை வைத்து முதலமைச்சர் விஜயின் பிறந்தநாளையொட்டி வாழ்த்து பாடல் பாடச் செய்து ரீல்ஸ் எடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவலுக்கு பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
செங்கல்பட்டு மற்றும் திருத்தணி அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளிகளில் நடைபெற்ற முதலமைச்சர் விஜயின் பிறந்தநாள் நிகழ்ச்சிகளில், பள்ளி மாணவர்களை வைத்து வாழ்த்து பாடல் பாடச் செய்து ரீல்ஸ் எடுத்ததாக வெளியாகியுள்ள செய்தி கண்டனத்திற்குரியது என்று கூறியுள்ளார்.
மேலும், பள்ளி என்பது மாணவர்கள் கல்வி கற்கும் இடமே தவிர, எந்த அரசியல் கட்சியின் புகழ் பாடும் மேடையோ அல்லது ரீல்ஸ் படப்பிடிப்பு தளமோ அல்ல என்றும் தெரிவித்துள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் மக்கள் பணியில் காட்ட வேண்டிய அக்கறையை ரீல்ஸ் அரசியலில் காட்டி வருவது ஜனநாயகத்தின் வெட்கக்கேடு என்றும், முதலமைச்சர் சினிமா துறையிலிருந்து வந்தவர் என்பதற்காக அந்த கலாச்சாரத்தை பள்ளி மாணவர்களிடம் திணிப்பது ஏற்க முடியாதது என்றும் வானதி சீனிவாசன் விமர்சித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற சம்பவங்களை முறையற்ற செயல் என்று கூறுவது மட்டும் போதாது என்றும், மாணவர்களின் கல்விச் சூழலை அரசியல் நோக்கத்திற்காக பயன்படுத்தியவர்கள் மீது உடனடியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
பள்ளி வளாகங்களில் அரசியல் நிகழ்ச்சிகள், புகழ் பாடல்கள் மற்றும் ரீல்ஸ் படப்பிடிப்புகள் போன்றவற்றை உடனடியாகத் தடை செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வானதி சீனிவாசன் தனது பதிவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Hindusthan Samachar / VINOTH KUMAR P