மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ - 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது
தேனி, 30 ஜூன் (ஹி.ச.) தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென காட்டுத்தீ பரவியது. வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவியதால், சுமார் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பக
மேற்குத் தொடர்ச்சி மலையில் காட்டுத்தீ - 15 மணி நேர போராட்டத்திற்குப் பின் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது


தேனி, 30 ஜூன் (ஹி.ச.)

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலை வனப்பகுதியில் நேற்று பிற்பகல் திடீரென காட்டுத்தீ பரவியது.

வறண்ட வானிலை மற்றும் பலத்த காற்று காரணமாக தீ வேகமாக பரவியதால், சுமார் 20 ஏக்கருக்கும் மேற்பட்ட வனப்பகுதி சேதமடைந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், தீயணைப்பு வீரர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

மலைப்பாங்கான பகுதி என்பதால் தீயணைப்பு வாகனங்கள் செல்ல முடியாமல், தீயணைப்பு வீரர்கள் கையால் அணைக்கும் கருவிகள் மற்றும் மரக்கிளைகளை கொண்டு தீயை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

இரவு முழுவதும் நீடித்த கடும் போராட்டத்திற்குப் பிறகு, இன்று காலை சுமார் 15 மணி நேரத்திற்குப் பின் தீ முழுமையாக அணைக்கப்பட்டது.

இந்த தீ விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், அரிய வகை மூலிகைச் செடிகள் மற்றும் சிறிய உயிரினங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.

தீ விபத்துக்கான காரணம் குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வனப்பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டாம் எனவும், வனப்பகுதியில் தீ மூட்டுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் எனவும் மாவட்ட வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b