Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 30 ஜூன் (ஹி.ச.)
வானம்பாடி இயக்கத்தை உருவாக்கி பெற்ற சாகித்ய அகாதெமி விருது வென்ற எழுத்தாளர் புவியரசு
(வயது 96 ) கோவையில் இன்று (ஜூன் 30) காலமானார்.
உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள லிங்கவநாயக்கன் புதூர் கிராமத்தில் சுப்பையா என்பவருக்கு மகனாகப் பிறந்த கவிஞர் புவியரசின் இயற்பெயர் சு. ஜெகநாதன்.
தமிழ் மீது கொண்ட பற்று காரணமாக தனது பெயரை புவியரசு என மாற்றிக்கொண்டார்.
இடைநிலை பட்டத்தைக் கோவை அரசு கலைக் கல்லூரியிலும் தமிழ் துறை பட்டத்தைப் பேரூர் தமிழ்க் கல்லூரியிலும் பெற்றார்.
கல்வி மீது கொண்ட பற்று காரணமாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியராகப் பணிபுரிந்தார்.
இவரது படைப்புகள் 1952லிருந்து வெளிவர ஆரம்பித்தன. தனது இலக்கியப் பயணத்தில் 80க்கும் மேற்பட்ட படைப்புகளைக் கொடுத்துள்ளார்.
ஷேக்ஸ்பியர், கலில் ஜிப்ரான், உமர் கய்யாம், ஓஷோ, ஃபியோடார் தாஸ்தோவ்ஸ்கி மற்றும் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோரின் படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.
இவரது சில கவிதைகள் ஆங்கிலம், ரஷிய, ஹங்கேரி மற்றும் சிங்கள மொழிகளிலும் இந்திய மொழிகளான மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
2007 ஆம் ஆண்டு வெளிவந்த புரட்சிக்காரன் என்ற கவிதைத் தொகுப்பு, மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. இவரது மற்றொரு கவிதைத் தொகுப்பான கையொப்பம் 2009 ஆம் ஆண்டுக்கான தமிழுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
இவர் எழுதிய முக்கூடல் எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2004 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.
தமிழ் ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அறக்கட்டளையானது, புவியரசு வளர்ச்சி மையம் என இவரது பெயரால் அழைக்கப்படுகிறது.
இவரது மறைவு செய்தி அறிந்த வாசகர்களும் சக எழுத்தாளர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
Hindusthan Samachar / vidya.b