Enter your Email Address to subscribe to our newsletters

திருச்சி, 30 ஜூன் (ஹி.ச.)
திருச்சி மாவட்டம் கல்மந்தை பகுதியைச் சேர்ந்த ராஜமாணிக்கம், வயது 22, என்பவர் நேற்று மாலை காந்தி மார்க்கெட் அருகே உள்ள பொது கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த அப்பகுதி மக்கள் உள்ளே சென்று பார்த்தபோது, ராஜமாணிக்கம் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
அவரது கையில் ஊசி மற்றும் போதைப்பொருள் பயன்படுத்தியதற்கான தடயங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காந்தி மார்க்கெட் போலீசார், ராஜமாணிக்கத்தை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
முதற்கட்ட விசாரணையில், அளவுக்கு அதிகமாக போதை ஊசி செலுத்தியதால் அவர் உயிரிழந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
உடற்கூராய்வுக்குப் பின்னரே மரணத்திற்கான முழுமையான காரணம் தெரியவரும் என காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
பொது இடங்களில் இளைஞர்கள் போதைப்பொருள் பயன்படுத்தும் சம்பவங்கள் அதிகரித்து வருவது திருச்சி மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருள் விற்பனையை தடுக்கவும், இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் காவல்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Hindusthan Samachar / vidya.b