Enter your Email Address to subscribe to our newsletters

சேலம், 30 ஜூன் (ஹி.ச.)
சேலம் மாவட்டம் முழுவதும் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில், மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தடுப்பூசி முகாம் நாளை (ஜூலை 01) முதல் தொடங்கப்பட உள்ளது.
வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும் இந்த முகாமில், நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட வயதுடைய அனைத்து பசு மற்றும் எருமை இன கால்நடைகளுக்கும் கட்டாயமாக கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
கோமாரி நோய் என்பது கால்நடைகளுக்கு வேகமாகப் பரவக்கூடிய ஒரு வைரஸ் நோயாகும். இதனால் பால் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படுவதோடு, கால்நடைகளின் உடல் எடை குறைந்து விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இந்நோயை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கில், மத்திய மற்றும் மாநில அரசுகளின் வழிகாட்டுதலின்படி இந்த தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முகாமை சிறப்பாக நடத்துவதற்காக, சேலம் மாவட்டம் முழுவதும் 149 சிறப்பு கால்நடை மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவினர் கிராமம் கிராமமாகச் சென்று, கால்நடைகளுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடுவர். மேலும், தடுப்பூசி செலுத்தப்பட்ட கால்நடைகளுக்கு அடையாள அட்டையும் வழங்கப்பட உள்ளது.
எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை வளர்ப்போரும், நான்கு மாதங்களுக்கு மேற்பட்ட தங்களது பசு மற்றும் எருமைகளுக்கு தவறாமல் தடுப்பூசி செலுத்தி, கோமாரி நோயிலிருந்து கால்நடைகளைப் பாதுகாத்துக்கொள்ளுமாறு கால்நடை பராமரிப்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
இதுகுறித்த கூடுதல் விவரங்களுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b