திருச்சி சிறுமி கடத்தி கூட்டுப் பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வேண்டும் – அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
திருச்சி, 04 ஜூன் (ஹி.ச.) திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் த
Anbumani


Hh


திருச்சி, 04 ஜூன் (ஹி.ச.)

திருச்சி காந்தி சந்தை பகுதியில் 15 வயது சிறுமி ஒருவர் மகிழுந்தில் கடத்திச் செல்லப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவது மிகுந்த கவலையளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சிறுமி கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தொடர்புடையவர்களில் மாரியப்பன் என்பவர் மட்டும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ள அன்புமணி ராமதாஸ், கடந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவியதாக குற்றம்சாட்டியுள்ளார். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகும் அதே நிலை நீடிக்கக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் நோக்கில் முதலமைச்சர் ஜோசப் விஜய் அறிவித்துள்ள சிங்கப்பெண் சிறப்புப் படை உள்ளிட்ட திட்டங்களை விரைந்து நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அரசு உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தனது கண்டனப் பதிவில் தெரிவித்துள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ