Enter your Email Address to subscribe to our newsletters

தமிழ்நாடு, 04 ஜூன் (ஹி.ச.)
பாஜகவில் இருந்து விலகுவதாக தேசியத் தலைவர் நிதின் நபினிடம் அண்ணாமலை கடிதம் வழங்கிய நிலையில், அந்த முடிவில் எந்த மாற்றமில்லை என்றும் திட்டமிட்டப்படி தனிக்கட்சி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலகிய பின் கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படாததால் அண்ணாமலை அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்பட்டது.
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்கப்போவதாக தகவல் பரவியது.
இந்நிலையில், டெல்லி சென்ற அண்ணாமலை, பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினை சந்தித்து பாஜகவில் இருந்து விலகுவதாக 5 பக்க கடிதத்தை வழங்கினார். கட்சியில் இருந்து விலகுவதற்கான காரணங்களையும் அண்ணாமலை அந்த கடிதத்தில் அடுக்கடுக்காக பட்டியலிட்டிருப்பதாக கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்து, மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்த அண்ணாமலை, பாஜகவில் இருந்து விலகும் தனது நோக்கம் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், அண்ணாமலை ராஜினாமா குறித்து விவாதிக்க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை உடனடியாக டெல்லி வருமாறு தேசியத் தலைமை உத்தரவிட்டது. இதையடுத்து, மதுரை, கோவை, சென்னை விமான நிலையங்களை தவிர்த்து திருவனந்தபுரம் வழியாக நயினார் நாகேந்திரன் டெல்லி விரைந்தார் .
இந்நிலையில் திட்டமிட்டப்படி தனிக்கட்சி தொடங்குவதில் அண்ணாமலை உறுதியாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் அமித் ஷா, நிதின் நபினை சந்தித்த போதும் அண்ணாமலை முடிவில் எந்த மாற்றமில்லை என தகவல் வெளியாகி உள்ளது. புதிய கட்சி தொடங்குவது குறித்து நாளை அண்ணாமலை அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் யார் மீதும் புகார் கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு சில மாதங்களில் கட்சியின் பெயரை அண்ணாமலை அறிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Hindusthan Samachar / VINOTH KUMAR P