கெட்டுப்போன பிரியாணியால் உடல்நலக்குறைவு- கேட்டரிங் நிறுவன உரிமம் அதிரடி ரத்து
ஶ்ரீ பெரும்புதூர் , 04 ஜூன் (ஹி.ச.) காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிட்ட 97 பெண் தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்
பிரியாணி


ஶ்ரீ பெரும்புதூர் , 04 ஜூன் (ஹி.ச.)

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற்பேட்டையில் செயல்பட்டு வரும் தனியார் தொழிற்சாலையில் வழங்கப்பட்ட பிரியாணி உணவை சாப்பிட்ட 97 பெண் தொழிலாளர்கள் வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளைப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள கார் கேபிள் உற்பத்தி செய்யும் 'டி.எஸ். கார்ப்பரேட்' நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு 'தன்வீர் புட்ஸ்' என்ற தனியார் கேட்டரிங் நிறுவனம் தினசரி உணவு வழங்கி வருகிறது.

வழக்கம்போல் புதன்கிழமை மதிய உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்ட நிலையில், முதல் கட்டமாக மதியம் 12 மணியளவில் உணவு பெற்ற தொழிலாளர்கள், பிரியாணியில் இருந்த சிக்கன் துண்டுகளில் கடுமையான துர்நாற்றம் வீசியதாக கூறி கேட்டரிங் ஊழியர்களிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

ஆனால் புகாரை அலட்சியப்படுத்திய ஊழியர்கள், சிக்கன் துண்டுகளை மட்டும் அகற்றிவிட்டு அதே பிரியாணியை அடுத்த கட்ட தொழிலாளர்களுக்கும் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து பிரியாணி சாப்பிட்ட பெண் தொழிலாளர்களுக்கு அடுத்தடுத்து வயிற்றுவலி, வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டது. பலர் மயங்கி விழுந்ததால் தொழிற்சாலை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.

உடனடியாக ஆம்புலன்ஸ்கள் மூலம் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். சிலர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பிய நிலையில், கடுமையாக பாதிக்கப்பட்ட 10-க்கும் மேற்பட்ட பெண் தொழிலாளர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினரும், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டனர்.

முதற்கட்ட விசாரணையில், கெட்டுப்போன இறைச்சி மற்றும் பிரியாணி வழங்கப்பட்டதே தொழிலாளர்கள் உடல்நலக்குறைவுக்கு காரணமாக இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் 'தன்வீர் புட்ஸ்' கேட்டரிங் நிறுவனத்தில் ஆய்வு நடத்தி, அதன் உணவு வழங்கும் உரிமத்தை ரத்து செய்ததுடன், நிறுவனத்தை மூடி சீல் வைத்துள்ளனர். மேலும், அந்நிறுவனம் மேற்கொண்டு உணவு தயாரிக்கவும் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம், ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார தொழிற்சாலைகளில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் மற்றும் பாதுகாப்பு குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது. தொழிற்சாலைகளுக்கு உணவு வழங்கும் கேண்டீன்கள் மற்றும் கேட்டரிங் நிறுவனங்கள் மீது உணவு பாதுகாப்புத்துறை தொடர்ந்து கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என தொழிலாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Hindusthan Samachar / VINOTH KUMAR P