Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஜூன் (ஹி.ச)
சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு பசுமை ஆற்றல் கழகத்தின் தலைமைப் பொறியாளர் அலுவலகத்தில் இருந்த கணினியின் ஹார்ட் டிஸ்க் மற்றும் அதிலிருந்த முக்கிய ஆவணங்கள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மின்வாரிய தலைமையகமான என்.பி.கே.ஆர்.ஆர். மாளிகையின் 5-வது தளத்தில் செயல்பட்டு வரும் நீர்மின் பிரிவில் உதவி செயற்பொறியாளராக மலர்விழி பணியாற்றி வருகிறார்.
அவர் பயன்படுத்தி வந்த அலுவலக கணினியில் உள்ள ‘D’ டிரைவ் மற்றும் அதிலிருந்த கோப்புகள் கடந்த மே 16-ஆம் தேதி மாலை 5.15 மணி வரை வழக்கம்போல செயல்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து வார விடுமுறைக்குப் பிறகு மே 18-ஆம் தேதி காலை அலுவலகத்திற்கு வந்த மலர்விழி, கணினியைப் பயன்படுத்தியபோது ‘D’ டிரைவ் மற்றும் அதிலிருந்த முக்கிய கோப்புகள் அனைத்தும் காணாமல் போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து உடனடியாக மின்வாரியத்தின் கணினி பராமரிப்பு பிரிவுக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது.
புகாரின் பேரில் அங்கு வந்த தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஊழியர் கோபிநாத் கணினியை ஆய்வு செய்தபோது, அதிலிருந்த ஹார்ட் டிஸ்க் முற்றிலும் அகற்றப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுவலகத்தின் முக்கிய மற்றும் ரகசிய ஆவணங்கள் சேமிக்கப்பட்டிருந்த ஹார்ட் டிஸ்க் மாயமானது அரசு ஆவணங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பியுள்ள நிலையில், உதவி செயற்பொறியாளர் மலர்விழி சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஜூன் 1-ஆம் தேதி சி.எஸ்.ஆர். பதிவு செய்யப்பட்டு முதற்கட்ட விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து ஜூன் 2-ஆம் தேதி பாரதிய நியாய சன்ஹிதா (BNS) சட்டத்தின் பிரிவு 305-ன் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அலுவலக கணினியில் இருந்து ஹார்ட் டிஸ்க்கை அகற்றிச் சென்றது யார், அதிலிருந்த முக்கிய தகவல்கள் எவ்வாறு கையாளப்பட்டுள்ளன என்பது குறித்து சிந்தாதிரிப்பேட்டை குற்றப்பிரிவு போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
Hindusthan Samachar / P YUVARAJ