Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச.)
திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் செயல்பட்டு வரும் கடைகளுக்கான வாடகை கட்டணத்தை குறைக்க கோரிய மனு தொடர்பாக, 8 வாரங்களுக்குள் முடிவெடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவேற்காடு அருள்மிகு தேவிகருமாரியம்மன் கோவில் நிலத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள மாத வாடகை கட்டணம் அதிகமாக உள்ளதாகக் கூறி, வழக்கறிஞர் காமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
மனுவில், கோவில் நிலத்தில் உள்ள 100 சதுர அடி பரப்பளவுள்ள கடைகளுக்கு மாதம் ரூ.2,000 வாடகை நிர்ணயிக்கப்பட வேண்டும். ஆனால் தற்போது சுமார் ரூ.7,000 வரை மாத வாடகை வசூலிக்கப்படுவதாகவும், இதனால் சிறு வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, திருவேற்காடு தேவிகருமாரியம்மன் கோவில் நிலத்தில் உள்ள கடைகளுக்கான வாடகையை மறுநிர்ணயம் செய்வதற்காக சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இதனை பதிவு செய்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை பரிசீலித்து, உரிய முடிவை 8 வாரங்களுக்குள் எடுக்குமாறு இந்து சமய அறநிலையத் துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.
Hindusthan Samachar / P YUVARAJ