Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 04 ஜூன் (ஹி.ச)
ஆயுள் தண்டனை கைதிகள் அளிக்கும் முன்கூட்டி விடுதலை கோரிக்கைகளை தாமதமின்றி பரிசீலிக்கும் வகையில், மின்னணு நடைமுறையை (Electronic Process) முன்னோடி திட்டமாக புழல் மத்திய சிறையில் அமல்படுத்துமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று 21 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனபாலை முன்கூட்டி விடுதலை செய்யக் கோரி அவரது மகன் நாஞ்சில் முகிலன் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும் சுந்தர் மோகன் அடங்கிய அமர்வு விசாரித்தது.
வழக்கின் போது, வெடிபொருள் சட்டத்தின் கீழ் தனபாலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருப்பதால், மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனினும், இந்த வாதத்தை ஏற்க நீதிமன்றம் மறுத்தது.
இதையடுத்து, தனபாலை முன்கூட்டி விடுதலை செய்ய மறுத்த அரசின் உத்தரவை ரத்து செய்த நீதிமன்றம், மனுதாரரின் கோரிக்கையை சட்ட விதிகளின் அடிப்படையில் மீண்டும் பரிசீலித்து, நான்கு வாரங்களுக்குள் புதிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
மேலும், முன்கூட்டி விடுதலை தொடர்பான மனுக்கள் பல்வேறு துறைகளில் நிலுவையில் இருந்து தாமதமடைவதை சுட்டிக்காட்டிய நீதிமன்றம், அவற்றை விரைவாக கையாளும் வகையில் மின்னணு நடைமுறையை முன்னோடி திட்டமாக புழல் மத்திய சிறையில் செயல்படுத்தவும் அறிவுறுத்தியுள்ளது.
இந்த நடைமுறை வெற்றிகரமாக அமல்படுத்தப்பட்டால், மாநிலத்தின் பிற சிறைகளுக்கும் விரிவுபடுத்தப்பட வாய்ப்பு உள்ளது.
Hindusthan Samachar / P YUVARAJ