Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 04 ஜூன் (ஹி.ச)
தமிழகத்தில் புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில், பள்ளிகளுக்கு திரும்பும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில்,
இந்தக் கல்வி ஆண்டின் முதல் நாளை புதிய நம்பிக்கையோடு தொடங்கும் என் அன்பிற்குரிய மாணவச் செல்வங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், கல்வியே எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் சக்தி என்பதை வலியுறுத்திய முதலமைச்சர், மாணவர்கள் உயரிய கனவுகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், அந்தக் கனவுகளை நனவாக்க கடினமாக உழைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
பள்ளிக்குச் செல்லும் ஒவ்வொரு நாளும் மாணவர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான புதிய படிக்கட்டாக அமைய வேண்டும் எனக் கூறிய அவர், கல்வியை மகிழ்ச்சியுடன் கற்றுக்கொள்ளுமாறும், அப்போது வெற்றி தானாகவே அவர்களைத் தேடி வரும் என்றும் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி ஆண்டு தொடங்கியுள்ள நிலையில் முதலமைச்சரின் இந்த வாழ்த்து பதிவு மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
மாணவர்களின் கல்வி முன்னேற்றம் மற்றும் எதிர்கால வளர்ச்சிக்கு தமிழக அரசு தொடர்ந்து முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தனது வாழ்த்து செய்தியின் மூலம் மறைமுகமாக உணர்த்தியுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ