விவசாய நில கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு - கடலூர் ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்
கடலூர், 04 ஜூன் ( ஹி.ச) கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு
விவசாய நில கையகப்படுத்தலுக்கு எதிர்ப்பு - ஆட்சியர் அலுவலகம் முன் விவசாயிகள் போராட்டம்


கடலூர், 04 ஜூன் ( ஹி.ச)

கடலூர் மாவட்டம் கீரப்பாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள 5 கிராமங்களில் விவசாய நிலங்களை கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கணக்கான கிராம மக்கள் இன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திரண்டு மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீரப்பாளையம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், பெண்கள், முதியவர்கள் என ஏராளமானோர் கைகளில் கோரிக்கை மனுக்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குவிந்தனர்.

கடந்த ஆட்சிக் காலத்தில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக தங்களது வாழ்வாதாரமான விளைநிலங்கள் முறையான ஆலோசனையின்றி கையகப்படுத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டினர்.

பல தலைமுறைகளாக நெல், கரும்பு, மணிலா உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வரும் தங்களது நிலங்களை இழந்தால், தங்களது வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

மேலும், கையகப்படுத்தலுக்கு வழங்கப்பட்ட இழப்பீடு போதுமானதாக இல்லை என்றும், மாற்று நிலம் அல்லது மறுவாழ்வு ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர்கள் புகார் கூறினர்.

நில கையகப்படுத்தல் நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும், ஏற்கனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களை மீண்டும் விவசாயிகளிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

தங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்தகட்டமாக தொடர் போராட்டங்களில் ஈடுபடப்போவதாகவும் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த மனு கொடுக்கும் போராட்டத்தால் ஆட்சியர் அலுவலகப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததையடுத்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.

Hindusthan Samachar / vidya.b