நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர் கொலை - 4 தனிப்படைகளை அமைப்பு
விழுப்புரம், 04 ஜூன் (ஹி.ச.) விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (53). இவர் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அர
Gingee Police Station


விழுப்புரம், 04 ஜூன் (ஹி.ச.)

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள அம்மாக்குளம் பகுதியை சேர்ந்தவர் இளங்கோவன் (53). இவர் மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதை ஆசிரியர் இளங்கோவன் பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவியை பிரிந்து தனது தாயுடன் வசித்து வருகிறார்.

இதனிடையே ஆசிரியர் இளங்கோவனின் தாய் ராஜம்மாள், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகளின் வீட்டிற்கு சென்று விட்ட நிலையில் ஆசிரியர் இளங்கோவன் மட்டும் அம்மாகுளத்தில் உள்ள வீட்டில் தனியாக இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாகவே சென்னையில் இருந்த தாய் ராஜம்மாள், சகோதரி உள்ளிட்டோர் ஆசிரியர் இளங்கோவனின் செல்போனுக்கு தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து ஆசிரியர் இளங்கோவனின் சகோதரி மகன் கணபதி என்பவர் நேற்று மாலை சென்னையில் இருந்து புறப்பட்டு அம்மாகுளம் கிராமத்தில் உள்ள ஆசிரியர் இளங்கோவனின் வீட்டிற்கு சென்று பார்த்துள்ளார்.

அப்போது வீட்டின் உள்பக்கம் தாழ்ப்பாள் போடப்பட்ட நிலையில் யாரும் திறக்காததால் வீட்டின் பின் பக்கமாக சென்று பார்த்த போது வீட்டில் இருந்து கடும் தூர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த கணபதி, போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

இதனையடுத்து செஞ்சி காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டு உடல் அழுகிய நிலையில் சடலமாக கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாய் பிரணீத் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினார்.

இதனையடுத்து அரசு பள்ளி ஆசிரியர் இளங்கோவனை கொலை செய்த கொலையாளிகளை பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN