மேல்நிலை துணைத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் இன்றுடன் நிறைவு
சென்னை, 04 ஜூன் (ஹி.ச) 2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பள்ளி மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது. மார்ச் மாதம் நடைபெற்ற பள்ளி மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும
Higher Secondary Supplementary Examination ends today


சென்னை, 04 ஜூன் (ஹி.ச)

2026 ஆம் ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடைபெறவுள்ள பள்ளி மேல்நிலை துணைத் தேர்வுகளுக்கான விண்ணப்பப் பதிவு இன்றுடன் நிறைவடைகிறது.

மார்ச் மாதம் நடைபெற்ற பள்ளி மேல்நிலை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் மற்றும் மதிப்பெண் மேம்பாட்டுக்காக மீண்டும் தேர்வெழுத விரும்பும் மாணவர்களுக்காக இந்த துணைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

தேர்வுத்துறை ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பின்படி, துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மே 18 ஆம் தேதி முதல் மே 30 ஆம் தேதி வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்கத் தவறிய மாணவர்களின் நலன் கருதி, தட்கல் முறையில் விண்ணப்பிப்பதற்காக ஜூன் 1 மற்றும் ஜூன் 2 ஆகிய இரு நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது.

அந்த தட்கல் அவகாசமும் முடிவடைந்த நிலையில், அபராதத் தொகையுடன் விண்ணப்பிப்பதற்கான இறுதி வாய்ப்பாக இன்று, ஜூன் 4 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நாளுக்குப் பிறகு விண்ணப்பங்கள் எந்தக் காரணத்தை முன்னிட்டும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனவே, துணைத் தேர்வு எழுத விரும்பும் மாணவர்கள் உடனடியாக www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் ஹால் டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Hindusthan Samachar / vidya.b