Enter your Email Address to subscribe to our newsletters

ஈரோடு, 04 ஜூன் (ஹி.ச.)
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மலைப்பகுதியில் உள்ள இருட்டிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த பசுவராஜ் (40), இரவு தனது பணிகளை முடித்துவிட்டு நண்பர் சிவக்குமாருடன் இருசக்கர வாகனத்தில் ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
இருவரும் 12வது மைல் வனப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்தபோது, காட்டிலிருந்து திடீரென வெளியே வந்த காட்டு யானை அவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பசுவராஜ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யானையின் தாக்குதலில் சிக்கிய சிவக்குமார் அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பி ஓடி உயிர் பிழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் மற்றும் போலீசார், உயிரிழந்த பசுவராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கடம்பூர் வனத்துறையினரும் போலீசாரும் இணைந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராம மக்கள் இரவு நேரங்களில் எச்சரிக்கையுடன் பயணிக்குமாறும் வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Hindusthan Samachar / ANANDHAN